“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.
‘அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சல் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள். சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது.
இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.
இதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை புரிந்துகொள்ளும். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. எனினும், அரசு தவறான பாதையில் தொடர்ந்து பயணித்தால் பிரதான பங்காளிக் கட்சியான நாம் அதிலிருந்து வெளியேறவும் தயங்கமாடடோம்” – என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]