மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு, குடித்து திருப்தியாக மக்கள் வாழ்ந்த நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என தற்போதைய அரசாங்கமே அறிவித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் வந்துராகலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வீட்டில் நடந்த மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
33 வீதமான குடும்பங்கள் ஒரு வேளை சாப்பிடும் நிலைமை
இலங்கை தற்போது கடனை செலுத்த முடியாத நாடு என அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இது வெட்ககேடு. 33 வீதமான குடும்பங்கள் ஒரு வேளை சாப்பிடும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
5 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளின் பெரும்பாலானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அரசாங்கமே நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக அறிவித்தது.
எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் 2 ஆயிரத்து 300 ஆண்டு வரலாற்றுக்கு உரிமை கோரும் கௌரவமான நாடு. மக்கள் மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு, குடித்து வாழ்ந்த நாடு. உலகம் ஆச்சரியப்படும் குளங்களை கொண்ட கட்டமைப்பு எமக்கு இருந்தது.
உலகம் அங்கீகரித்த வீடமைப்பு கலை எமக்கு இருந்தது. இவை எப்படி எமது நாட்டுக்கு கிடைத்தன என்று உலகமே ஆச்சரியப்பட்டது. அப்படியான நாட்டில் தற்போது ஒரு நாளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இப்படியான பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும். அப்படியான அரசாங்கம் தற்போது இருக்கின்றதா?. அப்படியான தலைமைத்துவம் இருக்கின்றதா?.
இதுவரை இரண்டு கட்சிகளே நாட்டை ஆட்சி செய்தன. ஏழு, எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கட்சிகளும் உள்ளன. மக்கள் விடுதலை முன்னணி தற்போது முன்நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றது.
மகிந்தவின் கனவு
ஏனைய கட்சிகள் முடிந்து விட்டன. நாட்டின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் இல்லாதொழித்து விட்டனர். இது குறித்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன்.
தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு அணிகளாக பிளவுப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலரை மொட்டுக்கட்சிக்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து அவர்களின் கொள்கைக்குமைய கட்சியை உருவாக்கும் கனவு மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தது. மகிந்த ராஜபக்சவினருக்கு பண்டாரநாயக்கவின் கொள்கைகள் எப்போதும் ஒத்து வராது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் கொள்ளையடிப்பவர்கள் இருக்கவில்லை. அந்த கட்சியை சிலர் அழித்து விட்டனர் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.