இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் சீர்குலைத்து அதன்மூலம் ஆட்சி பீடமேறிய அரசாங்கம், இப்போது அதற்கான பிரதிபலனை அனுபவிக்கின்றது.
அதன் விளைவாகவே தற்போது அரசாங்கத்திற்குள் பல்வேறு பிளவுகள் உருவாகியிருப்பதுடன் முதுகெலும்புள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, புதன்கிழமை மாலை தோப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் முன்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் சீர்குலைத்து, அதனூடாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.
இனவாதத்தைத் தூண்டி, வெறுப்புணர்வை விதைத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கத்திற்கு இப்போது என்ன நேர்ந்திருக்கின்றது? அந்த அரசாங்கத்திற்குள்ளேயே இப்போது பாரிய பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்குள்ளே பல்வேறு குழுக்களும் பிரிவுகளும் உருவாகியிருக்கின்றன.
மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து ஆட்சிக்குவந்த அரசாங்கத்திற்குத் தற்போது சிறந்த பாடம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]