உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விவகாரம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுடன் இன்று இரண்டு தரப்புக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தனியாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தனியாகவும் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
வவுனியாவில் 4 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு அநுராதபுரம் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி கடந்த வெள்ளிக் கிழமை வடக்கில் முழு அடைப்புப் போராட்டம், கவனயீர்ப்புப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக, அரச தலைவர் மைத்திரிபாலவை இது தொடர்பில் சந்திப்பதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதற்கு அமைவாக இன்று காலை 10 மணிக்கு அரச தலைவரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் சந்திக்கவுள்ளனர்.
இந்தக் குழுவில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதியான ம.சுலக் ஷனின் சகோதரியும் கலந்து கொள்ளவுள்ளார். அவரும் பல்கலைக்கழக மாணவியாவார்.
இதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் உறவினர்கள் இன்று மதியம் அரச தலைவர் மைத்திரிபாலவைச் சந்தித்து இந்த விடயம் குறித்து நேரில் பேசவுள்ளனர்.