டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை சூப்பர் – 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையை அடைவதற்கு வனிந்து ஹசரங்கா மற்றும் பத்தும் நிசாங்க ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக வலுவான கூட்டணியை பதிவு செய்தனர்.
அது மாத்திரமின்றி இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களும் தங்கொளுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக செய்து முடித்தமை ஆகும்.
2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 1.4 ஓவரில் எட்டு ஓட்டங்களை எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
(குசல் பெரேரா 0, சந்திமால் 6, அவிஷ்க பெர்னாண்டோ 0)
இலங்கையில் முதல் மூன்று விக்கெட்டுகளை இவ்வளவு குறைந்த ஓட்டத்தில் இழந்தது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இலங்கை முதல் மூன்று விக்கெட்டுகளையும் 11 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தது.
முதல் மூன்று விக்கெட்டுகளை எட்டு ஓட்டங்களில் இழந்த போதிலும், 150 ஓட்டங்களை கடந்த முதல் டெஸ்ட் நாடாக இலங்கை மாறியது.
அதற்கு காரணம் பதும் நிசங்க – வணிந்து ஹசரங்கவின் வலுவான இணைப்பாட்டம் ஆகும். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 82 பந்துகளை பயன்படுத்தி 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
டி-20 உலகக் கிண்ண போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2007 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 119 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.
இந்த இன்னிங்ஸில் இவர்கள் இருவருமே தங்களது டி-20 கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் அரை சதங்களை பதிவு செய்தனர்.
இறுதியாக வனிந்து ஹசரங்க 47 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டத்துடனும், பதும் நிசாங்க 47 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
பின்னர் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.
அணித் தலைவர் தசூன் சானக்க 21 ஓட்டங்களுடனும், சமீர ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
172 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 4.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களை பெற்றது.
(பால் ஸ்டிர்லிங் 07, கெவின் ஓ பிரையன் 05, கரேத் டெலானி 02)
32 ஓடடங்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும், அயர்லாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ பால்பெர்னி மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை சேர்த்தனர்.
இதன் பின்னர் 12.5 ஆவது ஓவரில் கர்டிஸ் கேம்பர் 24 ஓட்டங்களுடன் தீக்ஷணவின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற, அயர்லாந்து அணி மேலும் 16 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதன்படி அயர்லாந்து 18.3 ஓவரில் 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆல் அவுட் ஆனது.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் நமீபியாவுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார மற்றும் சாமிகா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க தெரிவானார்.
இதன் மூலம் 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
இதேவேளை அயர்லாந்து – நமீபியா அணிகளுக்கு இடையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கையுடன் சேர்ந்து முன்னேறும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]