ஐக்கிய அரபு மற்றும் ஓமானில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் ஹெற்றிக் சாதனையுடன் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அயர்லாந்தின் கேர்டிஸ் கேம்ப்ஹர்.
இதன் மூலம் இருபதுக்கு 20 அரங்கில் அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரராக தனது பெயரை பதித்தார் கேர்டிஸ் கேம்ப்ஹர்.
போட்டியின் 10 ஆவது ஓவரை வீசிய கேர்டிஸ் கேம்பர், அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான கொலின் அக்கெர்மென்னை விக்கெட் காப்பாளரிடம் பிடியெடுக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அதனை அடுத்து வீசப்பட்ட அடுத்த பந்தில் அதிரடி வீரரான ரயன் டென் டஸ்கட்டே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதையடுத்து வீசப்பாட்ட பந்தில் ஸ்கொட்ட எட்வர்ட்ஸையும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்யவே அயர்லாந்து சார்பாக ஹெற்றிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கேர்டிஸ்.
இதை அடுத்து வீசப்பட்ட அடுத்த பந்தில் முன்னாள் தென் ஆபிரிக்க வீரரும் தற்போது நெதர்லாந்துக்காக விளையாடும் ரோல்வ் வேன் டர் மேர்வ் ‘போல்ட்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் இந்த சாதனையை முதன் முதலாக நிகழ்த்தியவர் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் ஆவார்.
இவர், 2019 ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதியன்று அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மாலிங்க அதே ஆண்டு செப்டெம்பர் 6 ஆம் திகதியன்று நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் படைத்தார்.
இவ்வாறிருக்க, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியான 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திவர் என்ற சாதனையை படைத்தவர் லசித் மாலிங்க ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இச்சாதனையை படைத்திருந்தார்.
மேலும், இந்த ஹெற்றிக் சாதனையின் மூலமாக உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை அவர் கேர்டிஸ் கேம்ப்ஹர் பெற்றுக்கொண்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]