டப்ளினால் மழையினால் மூன்றரை மணி நேரம் தடைப்பட்டு 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
புவ்ணேஷ்வர் குமார், யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோரின் மிகவும் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் தீப்பக் ஹூடாவின் சிறந்த துடுப்பாட்டமும் இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து, ஹெரி டெக்டரின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 12 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.
4ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட்டை இழந்த அயர்லாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
தொடர்ந்து ஹெரி டெக்டரும் ஜோர்ஜ் டொக்ரெலும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். லோர்க்கன் டக்கர் 18 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் புவ்ணேஷ்வர் குமார் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
109 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 9.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தீப்பக் ஹூடா, இஷான் கிஷான் ஆகிய இருவரும் 16 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட் டுக்கொடுத்தனர். இஷான் கிஷான் 11 பந்தகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஓட்டம் பெறாமல் வந்த வழியே நடையைக் கட்டினார்.
தீப்பக் ஹூடாவுடன் இணைந்த அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 3ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க செய்தார்.
ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 24 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து தீப்பக் ஹூடாவும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
29 பந்துகளை எதிர்கொண்ட தீப்பக் ஹூடா 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். தினேஷ் கார்த்திக் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.