13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017 ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின், பசுபிக் விமானப்படையினால், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நீர்கொழும்பு விடுதி, கட்டுநாயக்க விமானப்படைத் தளம் ஆகியவற்றில் இடம்பெற்றது.
இதன் இறுதி நாள் நிகழ்வாக, அம்பாறை விமானப்படைத் தளம் அருகே வானில் இருந்து பொதிகளை தரையிறக்கும் ஒத்திகை நேற்றுக்காலை நிகழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படையின் C-130J விமானத்தில் இருந்து பொதிகள் தரையிறக்கப்பட்டதையடுத்து, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெற்ற படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 11ஆம் நாள் தொடக்கம் நடந்து வந்த, பசுபிக் விமான ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி முடிவுக்கு வந்தது.