அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்
தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்
முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்
சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான
முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள்
நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு
கைலாகு கொடுத்து
விரிந்த மலர்கொத்துக்களைபோல்
புன்னகையை நீட்டியவனின் உதடுகளை
மூடிக் கிடந்தது ஈரமண்
முள்முருக்கில் அமர்ந்திருந்த
வெண்புறா எழுந்து பறந்தது
கொடும் சிங்கத்தின் முகத்துடன்
இறகுகள் முறிக்கப்பட்ட புலுனி வீழ்ந்தது
நாவல் மரத்திலிருந்து
அமைதித் தாகத்தின்
புன்னகையடர்ந்த அவன் முகத்தின்
ஒரு துளி மௌனத்தில்
தோற்கும் உம் அறம் பிழைத்த போர்.
-தீபச்செல்வன்