அமைதிப்பூங்காவை அச்சபூமியாக மாற்றுவதை நிறுத்துங்கள்
அண்மைய காலங்களில் வடமாகாணத்தில் நடைபெற்று வருகின்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கவலைகளையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசகத்தி ஆனந்தன் ஊடகங்கக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:
நல்லாட்சி அரசாங்கம் தேசிய அரசாங்கம் என்று சொல்லக்கூடிய மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் உருவாவதற்கு எத்தகைய நிபந்தனைகளையும் விதிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. ஆனால் தற்பொழுது நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கையில் தீட்டிய மரத்தையே பதம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், இதுவரை காலமும் அமைதிப்பூங்காவாகத் திகழந்துவரும் வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக உள்ளது. இந்த சம்பவங்கள் கண்டனத்திற்குரியவை.
பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, பளை பிரதேசத்தில் மணல்ஏற்றிவந்த வாகனம் நிறுத்தாமல் சென்றதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, வடமராச்சியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று கடந்த சனிக்கிழமை மாலை மக்கள் நடமாட்டம் மிக்க நல்லூர் ஆலய சூழலில், பொதுமக்களின் கண்முன்னால் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மதிப்புமிகு மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பவை எமக்கு பாரிய அச்சத்தையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன.
1981ஆம் ஆண்டு அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தது. ஆனால் 1976ஆம் ஆண்டின் வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கமைய தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு அரைகுறை தீர்வையும் ஏற்கக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் தீர்மானித்து மக்களிடமும் அந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இளைஞர்களின் கோரிக்கைக்கு மக்களும் ஆதரவளித்திருந்தனர். அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களிடம் தமது வேட்புமனுவை திரும்பப்பெறுமாறும் அல்லாதுவிடின் பாரதூர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இளைஞர்கள் எச்சரித்திருந்தனர். இதனை ஏற்காத காரணத்தினால் அந்த கட்சியில் இணைந்து போட்டியிட்ட இருவரை கொலைசெய்துமிருந்தனர்.
இதனை காரணமாக வைத்து ஜே.ஆர். ஜெயவர்தன அமைச்சர் காமினி தலைமையில் சகல அதிகாரங்களுடன் சுமார் 800 பாதுகாப்புப் படையினரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். அதன் விளைவாகவே யாழ்ப்பாண நூலகத்திற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடக்கம் எண்ணற்ற வீடுகளும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்பனவும் தீக்கிறையாகின. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. அமிர்தலிங்கம் தனது இயலாமையின் காரணமாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆருடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்திருந்தார் என்பதும் அதன் காரணமாகவே பாதுகாப்புத்தரப்பினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர் என்பதும் அவர்கள் இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வையும் மீறி செயற்பட்டனர் என்பதும் அமர்தலிங்கம் ஜே.ஆருக்கு எழுதிய இரகசியக் கடிதம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தக் கடிதம் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் உட்கட்சிப் பூசலை தோற்றுவித்ததாக இன்றும் சாட்சிகளாக உள்ளவர்கள் கூறுகின்றனர்.
இன்று நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது அந்த சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. மணல் கொள்ளையர்களையும், சட்டவிரோத போதை வஸ்துக்களை இலங்கைக்குக் கடத்தி விற்பனை செய்துவரும் நிழலுலக மாபியாக்களையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முடியாதளவிற்கு காவல்துறையினர் செயற்படுகின்றனரா? அல்லது அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளனவா? என்ற கேள்விகள் எழுகின்றது.
அதே நேரத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற காரணத்திற்காக சாதாரண சிவிலியன்கள்மீது துப்பாக்கிச்சூடு நடைபெறுகின்றது.
ஏற்கனவே அச்சத்தின் பிடியில் சிக்கி நாளாந்தம் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதைப் பார்க்கின்றபோது இதன் பின்னணியை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது. பத்துபேருக்கு ஒரு இராணுவத்தினர், எந்த விதத்திலும் எம்மக்களுடன் தொடர்பு இன்றி செயற்படும் பொலிசார் ஆகியோர் கடமையாற்றுகின்ற பிரதேசத்தில் இத்தகைய சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன?
தமிழ் மக்கள் ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தெரியும். இத்தகைய சூழலில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமையானது எம்மை இன்னமும் அடக்கி வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்திற்கு வித்திட்ட அதே நாளில் நீதியரசரின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனைப் பார்க்கும்போது இதில் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
ஐ.நா.வின் பிரதிநிதிகள் புதிய அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும், ஐ.நா.விற்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க எத்தகைய முன்னேற்றத்தையும் காணவில்லை என்று தமது அவதானிப்பைத் தெரிவித்துள்ள நிலையில் நீதியரசரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்காமல் காலத்தை இழுத்தடித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் தற்பொழுது இரண்டு கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலையும் நிலையில் உள்ளதாக வெளியுலகிற்கு காட்டி அதனை இன்னமும் காலதாமதம் செய்வதற்கு முயல்வதாகவே எம்மால் பார்க்க முடிகிறது. மேலும், உண்மையான பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்பும் நோக்கில் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் எழுகின்றது.
மாகாணங்களின் கைகளில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால், இதனை எளிதில் கையாண்டிருக்க முடியும். அத்துடன் மாகாணத்தினால் முடியாத நிலையில் மத்திய அரசின் உதவியைக் கோரி இரண்டடுக்கு செயல்முறையின் மூலம் குற்றவாளிகளை எளிதில் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாலும் இந்த மண்ணுடனும் எமது மொழியுடனும் மக்களுடனும் தொடர்பற்றவர்களை வைத்து கருமங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாலும் பல பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன.
எது எப்படியிருப்பினும் அச்சத்தின் மத்தியில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்துவரும் தமிழ் சமூகத்தை மேலும் அச்சுறுத்தும் செயலை தொடராமல் நாட்டில் புறையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் மூலம் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும். இந்த நாட்டில் சம உரிமை படைத்த தமிழ் தேசிய இனம் கௌரவத்துடன் வாழ்வதற்குத் தடையாக உள்ள சமூகவிரோதிகளை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். சமீபத்தில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அனைத்து சூட்டுச் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் நீதியரசரைக் காப்பதற்காக தனது இன்னுயிரை நீத்த அவரின் மெய்ப்பாதுகாவவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உழைத்து ஊதியம் பெற்று குடும்பப் பொறுப்பை ஏற்றிருக்கும் குடும்பத் தலைவர் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை காணாமல் ஆக்கப்பட்டோரின் எமது உறவுகள் நன்கறிவர். ஆகவே அன்னாரைப் பிரிந்துவாழும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது துயரத்தில் நாமும் பங்கெடுக்கிறோம்.