அன்டிபயோட்டிக் (Antibiotic) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி “அனைவரும் ஒன்றிணைவோம் – நுண்ணுயிர் எதிர்ப்பிகளை காப்போம்” என்னும் தொனிப்பொருளில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட நடைபவணி இடம்பெற்றிருந்தது.
அன்டிபயோட்டிக் (Antibiotic ) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையற்ற பாவனைத் தொடர்பில் பொதுமக்களை தெழிவூட்டுவதற்காக சுகாதார அமைச்சின் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான மையத்தால் மேற்படி நடைபவணி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்ற இந்த நடைபவணியில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உள்நாட்டு கலைஞர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துக் கொண்டிருந்தனர். நேற்று காலை 10.00 மணியளவில் சுதந்திர சதுக்க வளாகத்துக்கருகில் ஆரம்பமாகிய பேரணி, சுகாதார அமைச்சை சென்றடைந்திருந்தது.
அன்டிபயோட்டிக் (Antibiotic ) என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவையற்ற மற்றும் தவறான பயன்பாடு மனித உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த மருந்துகளை தவறாக பயன்படுத்தும் போது நுண்ணுயிர்களின் எதிர்ப்பை வளர்த்து, மருந்துகளை பயனற்றதாக்கி, உடலின் ஆரோக்கியத்தை சாலான நிலைமைக்கு ஆளாக்கி விடுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அனாவசியமான பாவனை தேசிய மற்றும் சர்வதேச பேரழிவாக உருவெடுத்துள்ளது. மனிதர்கள் எதிர்நோக்கும் பிரதான பத்து உடல் நலப் பிரச்சினைகளில் ஒன்றாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2019 ஆண்டு மாத்திரம் 2300 பேர் உயிரிழந்துள்ளனர். நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகம் பயன்படுத்துகின்ற நாடு என்ற வகையில், இதற்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பெரும் அனர்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.
இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாவனையை கட்டுப்படுத்த மருந்துகளை இறக்குமதி செய்வதிலிருந்து பரிந்துரைப்பது வரையிலான செயல்முறையை நெறிப்படுத்துவதுடன் விஞ்ஞான ரீதியில் அவசியமான புதிய சட்டங்களை அமுல்படுத்தி அதற்கான பொறிமுறையை வலுப்படுத்தவும், மக்களை அறிவூட்டவும் விரைவில் முறையான திட்டமொன்று தயாரிக்கப்படும் என்றார்.