பிரேசிலில் அமேஸான் காடுகளில் தீ வைப்போர் என்ற சந்தேகத்தில் வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளும், பூமியின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமெஸான் காடுகள் கடந்த சில வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதில் பொலிவிய எல்லைக்குட்பட்ட 25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிந்து போயின.
பிரேசிலில் 9 ஆயிரத்து 500 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள், உயிரினங்கள் கருகி சாம்பலாகின. பிரேசில் அரசு தெரிவித்துள்ள தகவலின்படி இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. விவசாயம், சுரங்கம் மற்றும் மரம் வெட்டிக் கடத்துதல் போன்ற நிகழ்வுகளால் இந்த பேரழிவு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் தீயைத் தடுக்கவேண்டும் என உலக நாடுகள் பிரேசிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மேலும் அமெஸான் தீயை அணைப்பதில் பிரேசில் மந்தமாகச் செயல்படுவதாக சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே அமேஸான் காடுகளுக்குள் அத்துமீறி சிலர் சென்றதாகக் கூறப்படுகிறது.
இவர்களே தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு சென்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாரும் காயமடையவில்லை என்ற போதும், வனப்பகுதிக்குள் சென்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.