அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக டபுள்யூ.டபுள்யூ.எப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித செயல்பாடுகளால் ஆபத்தில் உள்ள பகுதிகளிலேயே புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 1999 முதல் 2015 வரையிலான காலத்தில் இங்கு 2000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைக் கொண்டுள்ள இந்த அறிக்கை பிரேசிலில் ஸா பாலோ நகரில் வெளியானது.
அமேசானில் கண்டுபிக்கப்படும் புதிய இனங்கள் தொடர்பாக வெளியாகும் அறிக்கைகளில், இது மூன்றாவதாகும். முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நிலநீர் வாழிகள், 20 பாலுௗட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமேசான் மழைக்காடு உலகிலே மிகப்பெரிய காடாகும். பல இனங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கொண்ட அமேசான் உயிர்கள் மற்றும் வாழ்விடப் பன்முகத்தன்மைக்கு பிரபலமானது.