அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, டிரம்ப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க உதவும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அதுவரை எச்1பி விசாவை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இதற்கு தடை விதித்து அமெரிக்க அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. பழைய நடைமுறைப்படி கிரீன் கார்டு விண்ணப்பத்திருந்தால், எச்1பி விசா காலாவதியாகியிருந்தாலும் அதனை புதுப்பிக்காமலே அங்கு வேலை செய்யலாம்.
புதிய உத்தரவுபடி, கிரீன் கார்டு விண்ணப்ப காலத்தில் எச்1பி விசா முடிந்து விட்டால் உடனடியாக ஊர் திரும்ப வேண்டும். எச்1பி விசாவை புதுப்பிக்க முடியாது.
இந்நிலையில் எச்-1பி விசா வழக்குவதற்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய விதிமுறைபடி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்களின் கல்வி தகுதி, அவருக்கு குறிப்பாக வழங்கப்படும் பணி, செய்யும் வேலையில் அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
அதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுபோலவே மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படாது.
அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் அதாவது 3 ஆண்டுகளுக்கு குறைவாக வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும்.
அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான விசா ஏப்ரல் 2ம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய உத்தரவு வெளிநாடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கும் மொத்த எச்1பி விசாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.