அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல்
அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியர், பாடகர் மற்றும் இசை ஆளுமையான பாப் டைலனுக்கு (75) 2016-ம் ஆண்டுகான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடலாசிரியருக்கு நோபல் வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இது பல உலக இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய அறிவிப்பாக திகழ்கிறது.
“அமெரிக்காவின் சிறந்த பாடல் மரபில் புதிய கவித்துவ வெளிப்பாடுகளை படைத்ததற்காக” பாப் டைலனுக்கு நோபல் வழங்குவதாக நோபல் அகாடமி தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
பாப் டைலன்: வாழ்க்கைக் குறிப்புகள்
பாப் டைலன் 1941-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள டியூலுத்தில் பிறந்தார். ஹிப்பிங் என்ற நகரில் நடுத்தர யூத குடும்பத்தில் வளர்ந்தார். பதின்ம வயதில் நிறைய இசைக்குழுக்களில் இவர் பாடியும் எழுதியும் வந்துள்ளார். நாளடைவில் அமெரிக்க நாட்டுப்புற இசை மீது ஈர்க்கப்பட்டார்.
இவரது பல ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்தவர் நாட்டுப்புற பாடகர் வுடி கத்ரி ஆவார்.
மேலும் பீட் தலைமுறை மற்றும் நவீனத்துவ கவிஞர்களும் இவர் மீது தனிப்பட்ட தாக்கம் செலுத்தியுள்ளனர். 1961-ம் ஆண்டு நியுயார்க் குடிபெயர்ந்த டைலன் கிரீன்விச் கிராமத்தில் கிளப்கள், விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்நிலையில்தான் இசைத்தட்டு தயாரிப்பாளர் ஜான் ஹேமண்ட் என்பவரை சந்தித்து தனது முதல் ஆல்பமான ‘பாப் டைலன்’ (1962) என்பதற்கு ஒப்பத்தத்தில் கையெழுத்திட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் பல ஆல்பங்களை பாப் டைலன் வெளியிட வெகுஜன இசையில் இது மிகப்பெரிய தாக்கத்தை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. குறிப்பாக Bringing It All Back Home, Highway61 Revisited-1965, Blonde On Blonde-1966 and Blood On The Tracks-1975. ஆகியவை பிரபலமடைந்தன.
இதன் பிறகு இவரது மாஸ்டர் பீஸ் என்று கருதப்படும் Oh Mercy (1989), Time out of mind (1997) மற்றும் Modern Times (2006) ஆகியவை இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
மனிதனின் சமூக சூழ்நிலைமைகள், மதம், அரசியல் மற்றும் காதல், அன்பு ஆகியவற்றை பாடுபொருள்களாகக் கொண்டு இவரது ஏகப்பட்ட இசைத்தொகுப்புகள் வெளிவந்தன. இவரது பாடல் வரிகள் பத்திரிகைகளில் வெளியாகின. ஒரு கலைஞராக பன்முகத் திறமை வாய்ந்தவர் பாப் டைலன். ஓவியராக, நடிகராக, திரைக்கதாசிரியராக இவர் பன்முக ஆளுமை கொண்டவர்.
ஆல்பங்கள் நீங்கலாக டைலன் பரிசோதனை படைப்புகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார். இவரது Tarantula (1971) மற்றும் எழுத்துகள், ஓவியங்கள் தொகுப்பு (1973), மற்றும் இவரது சுயசரிதை நூலான Chronicles (2004) ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. சுயசரிதை நூலில் இவரது ஆரம்பகால நியூயார்க் நினைவுகள் வெகுஜனக் கலாச்சாரத்தில் தனிப்பட்ட வாழ்வின் அம்சங்களை எடுத்துரைப்பதாக அமைகிறது. 1980களிலிருந்து பாப் டைலன் தொடர்ச்சியாக பயணத்தில் இருந்தார். பாப் டைலன் அமெரிக்காவின் ஒரு ஆளுமை. சமகால இசையில் இவரது தாக்கம் ஆழமானது.