நியூயோர்க் சிட்டி, ப்ளஷிங் மெடோவ்ஸ். ஆத்தர் அஷே அரங்கில் நடைபெற்றுவரும் இந்த வருட ஐக்கிய அமெரிக்க பகிரங்க (US Open) டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுவதாக நடப்பு சம்பியன் கோக்கோ கோவ் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை ஆரம்பமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆரம்ப சுற்றில் ரஷ்ய வீராங்கனை வாவரா க்ரச்சேவாவை இரண்டு நேர் செட்களில் மிக இலகுவாக வெற்றிகொண்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
66 நிமிடங்களில் முடிவடைந்த அப் போட்டியில் 6 – 2, 6 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் கோக்கொ கொவ் வெற்றிபெற்றார்.
பெலாரஷ்ய வீராங்கனை அரினா சபலென்காவை கடந்த வருட அமெரிக்க பகிரங்க இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு முதல் தடவையாக மாபெரும் டென்னிஸ் போட்டி ஒன்றில் சம்பியன் பட்டத்தை சூடிய கோக்கோ கோவ், இந்த வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் அரை இறுதிவரை முன்னேறியிருந்தார்.
ஆனால், அண்மைக்காலமாக டென்னிஸ் அரங்கில் அவர் சோபிக்கவில்லை. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுடன் வெளியேறிய கோவ், சின்சினாட்டி மற்றும் டொரன்டோ போட்டிகளிலும் ஆரம்ப சுற்றுகளில் தோல்வி அடைந்திருந்தார்.
கடந்த சில வாரங்கள் தனக்கு மிகவும் கடுமையாக இருந்ததாக கோவ் குறிப்பிட்டார். க்ரச்சேவாவுக்கு எதிரான வெற்றியில் வெளிப்படுத்திய ஆற்றலைப் பற்றி கோ வ் கூறுகையில், ‘மிக அண்மைக் காலத்தில் நான் விளையாடிய அதிசிறந்த போட்டி இது’ என்றார்.
டிக் டொக் கணக்கில் ரசிகர் ஒருவர் வெளியிட்ட கருத்தே, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான சூழ்நிலையைத் தோற்றுவித்தது என அவர் குறிப்பிட்டார்.
‘நீங்கள் வாழ்க்கையில், உண்மையில் மற்றும் அடையாளபூர்வமாக வெற்றிபெற்றுள்ளீர்கள். ஆகையால் வெற்றி நடையில் நீங்கள் உங்கள் மீது அழுத்தத்தைத் திணித்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை’ என எனது டிக் டொக் கணக்கில் யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, ‘நானும் அப்படித்தான் இந்த சுற்றுப் போட்டியைக் கருதுகிறேன். நீங்கள் எதையாவது தக்கவைத்துக்கொண்டால் நீங்கள் எதையாவது வென்றீர்கள் என்பது அர்த்தம்’ என கோவ் மேலும் கூறினார்.
இதேவேளை, தகுதிகாண் சுற்றின் மூலம் பிரதான போட்டியில் விளையாட தகுதிபெற்ற ஆர்ஜன்டீன வீராங்களை சொலானா சியேராவை 2 நேர் செட்களில் (6 – 2, 6 – 3) வெற்றிகொண்ட ஜேர்மனியின் அனுபவசாலியான டட்யானா மரியாவை 2ஆவது சுற்றில் கோவ் எதிர்த்தாடவுள்ளார்.