அமெரிக்க தூதரகத்தை சுற்றி வளைத்த பொதுமக்கள்: பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க ஆதிக்கக்கத்திற்கு எதிராக அந்நாட்டு தூதரகம் முன்பு திரளான மக்கள் கூடி பேரணியில் ஈடுபட்டது கலவரத்தில் முடிந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதனிடையே பேரணி கலவரத்தில் முடியவே பொலிஸ் வாகனங்களை கட்டைகளால் தாக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ தமது அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவே தற்போது அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவுக்கு எதிராக பேரணி மற்றும் கலவரம் நடக்கயில் ஜனாதிபதி ரோட்ரிகோ அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
அமெரிக்க எதிர்ப்பு நிலை காரணமாக ரோட்ரிகோ தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே அவர் சீனா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக ரோட்ரிகோ அரசு மேற்கொண்ட கொலைவெறி தாக்குதல் நடவடிக்கையே ஒபாமா அரசு எதிர்ப்பு தெரிவிக்க காரணமாக கூறப்படுகிறது. ஆனால் தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கை சரியென்று ரோட்ரிகோ வாதிட்டு வருகிறார்.