அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஹிலாரிக்கு வாழ்த்து
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை உறுதி செய்துள்ள ஹிலாரி கிளின்டன், பெண்களுக்கான வரலாற்று முக்கியத்துவமிக்க தருணத்தை எட்ட தனக்கு உதவிய தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மைல்கல்லொன்றை எட்ட உதவிய உங்களுக்கு நன்றி” என அவர் கூறினார்.
அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியூ ஜெர்ஸி, தென் டகோதா மற்றும் நியூ மெக்ஸிக்கோ ஆகிய பிராந்தியங்களில் இடம்பெற்ற ஜனநாயக கட்சியின் உட்கட்சி வாக்கெடுப்புகளில் வெ ற்றி பெற்றிருந்தார்.
அதேசமயம் அவரது கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்காளரான பெர்னி சாண்டர்ஸ் மொன்டானா மற்றும் வட டகோதா பிராந்தியங்களில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிலாரி கிளின்டன் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்குத் தேவையான பிரதிநிதிகளைப் பெற்றுள்ள நிலையில் அமெகரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவருக்குப் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெர்னி சாண்டர்ஸ் இன்று வியாழக்கிழமை பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெறுவதற்கு 2,383 பிரதிநிதிகளைப் பெறுவது அவசியமாகவுள்ள நிலையில் ஹிலாரி கிளின்டன் இதுவரை 2,755 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளார்.
அதேசமயம் பெர்னி சாண்டர்ஸ் இதுவரை 1,852 பிரதிநிதிகளை மட்டுமே பெற்றுள்ளார்.