அமெரிக்க இராணுவ வீரர்கள் நள்ளிரவில் உலவத்தடை : ஜப்பான் உத்தரவு
ஜப்பானில் ஒகினாவா தீவில் அமெரிக்க இராணுவ தளம் உள்ளது. அங்கு சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அண்மையில் குறித்த பகுதியில் வைத்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்கு தங்கியிருந்த 20 வயது பெண்ணை காணவில்லை. இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு அவள் பிணமாக மீட்கப்பட்டாள். பிரேத பரிசோதனையில் அப்பெண் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவளை அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும், வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக அமெரிக்க கடற்படை வீரர் கென்னத் ஷின்சடோ (32) என்பவர் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் ஒகினாவா மக்கள் அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது கடும் கோபத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், குறித்த பெண்ணின் மரணத்துக்கு அங்கு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு முதல் நள்ளிரவு வரை அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மதுபான விடுதிகளுக்கு செல்லவும், மது அருந்தவும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஜூன் 24ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டார். யுவதியொருவர் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும், சம்பந்தப்பட்ட வீரர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவரிடம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.