அமெரிக்கா வீரருக்கு பதிலடி கொடுத்த மின்னல் மனிதன்!
தன் காயம் குறித்து விமர்சித்த அமெரிக்கா வீரர் காட்லினுக்கு, மின்னல் மனிதன் என்றழைக்கப்படும் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் பதிலடி கொடுத்துள்ளார்.
29 வயதான உசைன் போல்ட் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்து வருகிறார். 2008, 2012 ஒலிம்பிக் தொடரில் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் ஜமைக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் காயம் காரணமாக போல்ட் பாதியில் வெளியேறினார். தற்போது, உடற்தகுதி பெற்று நேற்று நடைபெற்ற லண்டன் ஆண்டு விழா போட்டியில் கலந்து கொண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த சக வீரர் ஜஸ்டின் காட்டிலின் கூறிதாவது, தற்போது ஜமைக்காவில் என்ன நிகழ்கிறது? உசைன் போல்ட் திடீரென காயமடைகிறார். பின்னர் மெடிக்கல் சோதனையில் தகுதி பெறுகிறார். அவருடைய நாடு என்ன செய்கிறது? எங்களுடைய நாட்டில் இப்படி செய்ய முடியாது’’ என கூறியுள்ளார்.
இதற்கு போல்ட் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து போல்ட் கூறுகையில் ‘‘இரண்டு முறை ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி தடை பெற்ற காட்லின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது சிரிப்பாக இருக்கிறது.
என்னை பொறுத்தவரையில் இதை ஒரு நகைச்சுவையாகவே உணர்கிறேன். நான் போட்டியில் இருந்து பின்வாங்கியதாக அவர்கள் நினைப்பதை அவமரியாதையாக எண்ணுகிறேன்.
நான் தான் சிறந்த வீரர் என்பதை வருடத்திற்கு வருடம் நிரூபித்துக்கொண்டு வருகிறேன். உடற்தகுதி பற்றி பேசியதைக் கேள்விப்பட்டு நான் சிரித்தேன். குறிப்பாக காட்லின் பேசியது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என கூறியுள்ளார்.