இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் சின்டி மெக்கெய்ன், இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவை நேற்று(26.09.2022)கொழும்பில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை மக்களுக்கான அமெரிக்காவின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த சந்திப்பில் மீண்டும் உறுதிப்படுத்துவதாக தூதுவர் சின்டி மெக்கெய்ன், இதன்போது தெரிவித்துள்ளார்.
சிண்டி மெக்கெய்னின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
தூதர் சிண்டி மெக்கெய்ன் செப்டெம்பர் 28 வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த காலப்பகுதியில் அமெரிக்க உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் உள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதற்கு மேலதிகமாக, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திற்குச் சென்று பாடசாலைகள் , விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளை பார்வையிடவும், நிவாரணம் பெறுபவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.