அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அஞ்சல் துறையின் வேனை கடத்திய நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி சுடுவது போல் துப்பாக்கியால் சுட்டதில் 4 அப்பாவிகள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட 21 பேர் காயமுற்றனர். தாக்குதல் நடத்திய கொடூரனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மேற்கு டெக்சாஸின் மிட்லாண்ட் நகரில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை அன்று பிற்பகலில் அஞ்சல் சேவை வேன் ஒன்று கடத்தப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் உஷாரான போலீசார், ஒடெஸ்ஸா நகரில் அந்த வேனை வழிமறித்தனர்.
அப்போது வேனில் இருந்த மர்மநபர், போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், போலீசார் 3 பேரின் உடல்களை தோட்டாக்கள் துளைத்தன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவனைப் பிடிக்கும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மிட்லாண்ட் – ஒடெஸ்ஸா நகரங்களுக்கு இடையே கடத்தப்பட்ட வேனில் அதிவேகத்தில் சென்ற கொடூரன், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், வணிக வளாகங்களை விட்டு வெளியே வந்தோர், திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு திரும்பியோர் என அனைவர் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். இதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறுதியாக ஒடெஸ்ஸா நகரில் உள்ள திரையரங்கிற்கு அருகே அவன் சென்ற வேன் விபத்துக்குள்ளாகவே போலீசார் சுற்றிவளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்திற்கிடையே, திரையரங்கில் இருந்தவர்களை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கிச்சூடு குறித்த விவரம் அறிந்தோர் பதற்றத்துடன் அலறியபடி வெளியேறினர்.
21 பேரை சுட்டுக் காயப்படுத்திய இந்த கொடூரத் தாக்குதலை இரண்டு பேர் செய்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தாக்குதல் நடத்தியது ஒருவன் தான் என்பதையும் அவன் 30 வயது மதிக்கத்தக்க வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞன் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.