அமெரிக்காவில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர படுகொலைக்கு புலம்பெயர் தமிழீழ அரசு கண்டனம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது ஹோமோபோபிக் மற்றும் இனவெறியர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூர படுகொலையை புலம்பெயர் தமிழீழ அரசு வன்மையாக கண்டித்துள்ளது.
பெருவாரியான அமெரிக்க மக்களால் வரலாற்றிலேயே மிகவும் மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவம் என கருதப்படும் இந்த துயர நிகழ்வில் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவி குடிமக்கள் மீது தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை காலந்தோறும் உலகம் கண்டுணர்ந்து வருகிறது. இது உலகில் ஏதோ தவறு இருப்பதை குறிப்பதாகவே படுகிறது என புலம்பெயர் தமிழீழ அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை, விவாதம் என மேற்கொண்டு வேற்பாடுகளை களைவதற்கு பதிலாக, வன்முறை முதன்மையானதாக மாறிவிட்டது. அத்துடன் எண்ணத்தை வெளிப்படுத்த அது உடனடி வடிவமாகியுள்ளது. நாம் எங்கே தவறிழைத்தோம்? இதே நிலை நீடித்தால் என்ன மாதிரியான எதிர்காலத்தை நமது குழந்தைகளும் பேரப்பிள்ளைகளும் எதிர்பார்க்க முடியும்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வன்முறை, வெறுப்பு மற்றும் மோதல்களால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் சமூக தளங்களில் ஒரு எழுச்சி அதிகரித்திருப்பது தெளிவாகியுள்ளது. சிலரது பேராசை அதிகார வெறி காரணமாக கண்ணியமாக வாழ அனுமதி மறுக்கப்பட்ட அல்லது பூமியில் தங்கள் பங்கு வளங்களை அனுபவிக்க முடியாத சாதாரண மக்கள், கூட்டம் கூட்டமாக புலம்பெயர்வதுதான் இதற்கு காரணம்.
வன்முறையை எக்காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது, இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் அது வெறும் வாய்ப்பேச்சால் அல்ல ஜனநாயகம் மற்றும் நீதி ஆகிய அனைவரது சித்தாந்தங்களாலும் ஒட்டுமொத்த உலக நாடுகளின் அர்ப்பணிப்பாலும் மட்டுமே முடியும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மோதல்களை இல்லாமல் செய்தால் மட்டுமே நாம் உண்மையான அமைதியும் செழிப்பும் நிறைந்த ஒரு புது சகாப்தத்தை எதிர்நோக்க முடியும்.
இந்த துயரமான நேரத்தில் புலம்பெயர் தமிழீழ அரசு அதன் சொந்த பொறுப்புகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி அனைத்து இலக்குகளையும் அடைய வாழ்த்துகிறது. அதுவே அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஒரே வழி என புலம்பெயர் தமிழீழ அரசு வன்மையாக கண்டித்துள்ளது.