அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு, யூதர்களின் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்த நபர், சரமாரியாக சுட்டதில், 11 பேர் உயிர் இழந்தனர்; நான்கு போலீசார் உட்பட, ஆறு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவன், போலீசில் சரணடைந்தான்.அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பிரபல யூதர்களின் வழிபாட்டு தலத்தில், நேற்று முன்தினம், ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது.அப்போது, துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன், சரமாரியாக சுடத் துவங்கினான். இதில், 11 பேர் உயிரிழந்தனர். நான்கு போலீசார் உட்பட, ஆறு பேர் காயமடைந்தனர்.போலீசார் சுட்டதில் காயமடைந்த அவன், சரணடைந்தான். விசாரணையில், அவன் பெயர், ராபர்ட் போவர்ஸ், 46, என, தெரியவந்தது.அவனது, ‘பேஸ்புக்’ சமூகதளத்தை ஆராய்ந்தபோது, அதில், யூதர்களுக்கு எதிராக பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளதும் தெரியவந்தது.துப்பாக்கியால் சுடுவதற்கு முன், ‘யூதர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்’ என, அவன் கோஷமிட்டுள்ளான். ‘இது வெறுப்பில் நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாத செயல் அல்ல’ என, போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.”உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு முழுவதும், வரும், 31வரை, அனைத்து இடங்களிலும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்,” என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.தாக்குதல் நடத்திய போவர்ஸ் மீது, மரண தண்டனை விதிக்கும் பிரிவு உட்பட, 29 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.