அமெரிக்காவின் நியுயோர்க்கில் வைத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த சில கருத்துக்களை, இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
நியுயோர்க்கில் வைத்து இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டு கருத்துக்களை கூறியிருந்தார். ஒன்று காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழை மிக விரைவில் வழங்குவதாக.
நாட்டினுடைய ஜனாதிபதியும், அரசாங்கமும் விளங்கிக் கொள்ள வேண்டும் நேரடியாக கையளிக்கப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பதை தான் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும், மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் மரண சான்றிதழை கேட்கவில்லை. மரண சான்றிதழை வழங்குவதை நிறுத்த வேண்டும், அதனை பெற்றுக் கொள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோரும், மனைவிமாரும் விரும்பவில்லை.
அடுத்ததாக இன்னொரு விடயம் கூறியிருக்கிறார், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் பிற்பாடு பொது மன்னிப்பு வழங்க தயங்கமாட்டேன் என்று.
அப்படியானால் நீதிமன்ற தீர்ப்பு எப்போது வரும்? இது தொடர்பான வழக்குகள் நிறைவடைய வாய்ப்புகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த மரண சான்றிதழ் மற்றும் பொது மன்னிப்பு கருத்துக்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.