அமெரிக்காவில் கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகங்களை சிறிய டப்பாக்களில் அடைத்து கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹாங்காங்கிலிருந்து கடத்தி வந்த பயங்கர விஷத்தன்மை கொண்ட ராஜநாகங்களை உருளைக்கிழங்கு சிப்ஸ் டப்பாக்களில் மறைத்து கொண்டு வந்த அந்த அமெரிக்க இளைஞரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போலீசார் கைது செய்தனர். அவருடைய டப்பாக்களை சோதனையிட்டதில் பயங்கர விஷத்தன்மையுள்ள 2 அடி நீளமுள்ள 3 ராஜநாகங்களும், மற்ற டப்பாக்களில் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமைகளும் இருந்தன. அவரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு முன் இதே போன்று டப்பாக்களில் 20 ராஜ நாகங்களை ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டதால் அந்த கிங் கோப்ராக்கள் அனைத்தும் உயிரிழந்திருந்துள்ளன. இந்த வழக்ககளையும் சேர்த்து அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படலாம் என்று அமெரிக்க சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.