அமெரிக்காவில் இரட்டை துப்பாக்கிப் பிரயோகங்கள்: நால்வர் உயிரிழப்பு, 11 பேர் காயம்
அமெரிக்காவின் மேரிலன்ட் மற்றும் நியூயோர்க் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை மேரிலன்ட்டில் உள்ள கபிடல் ஹைட்ஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் நடத்தப்பட்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பிரின்ஸ் ஜோர்ஸ் கவுன்டி பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நேற்று காலை நியூயோர்க்கின் நியூபேர்த்தில் இடம்பெற்ற விழாவொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதோடு, மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போதும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.