அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலோவா எரிமலை நெருப்பு குழம்புகளை கக்கி வருவதால் அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலோவா எரிமலை உள்ளது. இந்த எரிமலை அவ்வப்போது சீற்றமடைந்து லாவா குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சிதறியது. மிகுந்த சத்தத்துடன் வெடிக்கும் எரிமலையில் இருந்து வானத்தை நோக்கி லாவா குழம்புகள் வெளியேறி வருகிறது. எரிமலை அபாயகரமாக வெடித்து சிதறலாம் என அமெரிக்க புவியியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் எரிமலை அமைந்துள்ள பகுதியில் பிளவு ஏற்பட்டு வெப்பம் வெளியேறியுள்ளது. தற்போது சுமார் 150 மீட்டர் உயரத்துக்கு லாவா குழம்புகள் வெடித்து சிதறுகின்றன. சுமார் 183 மீட்டர் அகலத்துக்கு லாவா குழம்பு பரவியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா, குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்கிறது. மேலும், இந்த லாவா காட்டுப் பகுதிகளில் வழியாக பரவி வருவதால் மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகின்றது. அந்த பகுதியில் உள்ள 1000 பேர் உடனடியாக ஹவாய் தீவை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. சிலர் தங்களது கால்நடைகளுடன் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் ஹவாய் கவுன்டி பாதுகாப்பு ஏஜென்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பகுதியை மூடியுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.