அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வில்சன் கவுன்டியில் உள்ள தேவாலயத்தில் விமானப்படை முன்னாள் வீரர் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரியை குறிவைத்து ஸ்டீபன் படாக் என்பவர் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் உயிரிழந்தனர். 546 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், தோர்ன்டன் நகரில் உள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியாகினர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வில்சன் கவுன்டியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியபோது உள்ளூரை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: முதல்கட்ட விசாரணையில் தேவாலயத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் டெவின் பேட்ரிக் கெல்லி (26) என்பது தெரியவந்துள்ளது. இவர் அமெரிக்க விமானப் படையின் முன்னாள் வீரர். மனைவி, குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக விமானப்படையில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டில் அவர் நீக்கப்பட்டார். அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீ ஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியபோது, துப்பாக்கியால் சுட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே துப்பாக்கிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார்.