அமெரிக்க நகரமான கெனோஷாவில் (Kenosha) தொடர்ந்து இடம்பெற்றுவரும் அமைதியின்மை காரணமான இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கறுப்பின அமெரிக்கர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதையடுத்து இடம்பெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில் நேற்று இரவில் இரவு ஆரம்பிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே இருவர் உயிரிழந்தனர்.
அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்கள் குறித்து விபரம் தெரிவராத நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, போராட்டக்காரர்களுக்கும் ஒரு எரிவாயு நிலையத்தை பாதுகாக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதலிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படாது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற கறுப்பின அமெரிக்கர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து கெனோஷா நகரில் அமைதியின்மை ஏற்பட்டது.
மக்கள், நகரத்தில் அவசரகால ஊரடங்கு உத்தரவுகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் வன்முறைகளாக வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.