அரிசோனாவின் பாலைவனப் பகுதியில், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். வாசனை திரவியம், சிகரெட் புகை, புதுத் தாள், புதுத் துணி, பிளாஸ்டிக், பூக்களின் நறுமணம், ரசாயனங்கள் என்று எத்தனையோ வித ஒவ்வாமைகள் தோன்றுகின்றன. இவர்களால் மற்றவர்களைப்போல் இயல்பாக இருக்க முடிவதில்லை.
காலப் போக்கில் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மருத்துவத்தை நாடாமல், தாங்களே சரிசெய்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால் மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, தனியாக வசித்து வருகிறார்கள். தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
1988-ம் ஆண்டு ப்ரூஸ் மெக் க்ரியரி ரசாயன ஒவ்வாமை ஏற்பட்டதால், பாலைவனத்தில் வந்து தங்கிவிட்டார். 1994-ம் ஆண்டு சூசி மோல்லோய் தனக்கு ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தார். தனியாக வசிக்க முடிவெடுத்து, இந்தப் பகுதிக்குக் குடியேறினார்.
இன்றுவரை தன்னுடைய காரில் தான் வசித்து வருகிறார். காகிதங்களைத் தொடும்போது கைகளுக்கு உறை மாட்டிக் கொள்கிறார். புகை பிடிக்காததால் முகமூடி அணிகிறார்.
இப்படி உலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்பவர்களுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் நிதியுதவி செய்கிறார்கள். அதனால் இவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். உதவி செய்துகொள்கிறார்கள். சுமார் 30 பேர் இப்படி வசித்து வருகிறார்கள்.