பொதுமக்களின் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் முறை அபுதாபியில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி அரசு சார்பில் புதிதாக மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்வதை வைத்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90.3 சதவீதம் தொற்றுடையவர்களிடம் இருந்து மிகத்துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது.
அதேபோல் தொற்று இல்லாதவர்களை கண்டுணரும் சோதனையில் 83 சதவீத துல்லிய முடிவுகள் பெறப்பட்டது. என அபுதாபி சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் ஜமால் முகம்மது அல் காபி தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது ஆகும். அதாவது ஒருவரின் உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும்.
இந்த முறையில் சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்படுகிறது.அந்த ரேடாரின் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படுகிறது.
அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் போதும்.
ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும். அதாவது கொரோனா தொற்று இல்லை என்றால் ஸ்கேன் செய்யும்போது அதில் பச்சை நிறத்தில் ஒளிரும்.
கொரோனா தொற்று உள்ளது என்றால் சிவப்பு நிறத்தில் ஒளிரும். அவ்வாறு சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும்.
இந்த நவீன முகத்தை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அபுதாபியில் உள்ள வணிக வளாகங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், ஒரு சில குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகள் ஆகியவற்றில் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.