2015, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இருவரும் தலா ஒவ்வோர் ஆட்டத்தில் ஜெயித்திருக்க, நடந்த 3-வது போட்டி இந்த இரு அணிகளுக்கும் முக்கிய ஆட்டமாக அமைந்தது. சீரியஸைக் கைப்பற்றும் நோக்கோடு இரு அணிகளும் முழு வேகத்தோடு களமிறங்கின. இந்தியா பேட்டிங். சடசடவென விக்கெட்டை இழந்த இந்திய அணி, 119 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது. ஒரு முனையில் புஜாரா மட்டும் போராடிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு வந்த கோலியோடு 50 ரன், ரோகித் ஷர்மாவோடு 55 ரன், நமன் ஓஜாவுடன் 54 ரன் என, குட்டிக்குட்டிப் பார்ட்னர்ஷிப்கள் அமைத்தார். 8-வது விக்கெட்டில் களமிறங்கிய அமித் மிஷ்ராவோடு இவர் போட்ட கூட்டணி, ஆட்டத்தைப் புரட்டிப்போட்டது. இறுதியில் 312 ரன்னைக் குவித்து கம்பீரமாக நிமிர்ந்தது இந்திய அணி. இன்னிங்ஸின் முடிவில் 145 ரன்னைக் குவித்த புஜாரா, தன் விக்கெட்டை இழக்காமல் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார்.
2017, ஜனவரி 24 (நேற்று), ஜோகன்னஸ்பர்க். இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட். ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் சொற்ப ரன்களில் அவுட். கேப்டன் கோலியுடன் பார்ட்னர்ஷிப். முதல் செஷனில் மோர்கல், பிலாண்டர், ரபாடா, பெலுக்வாயா, எங்கிடி ஐந்து பேரும் ஸ்விங், Seam, பெளன்ஸ் என மிரட்டுகிறார்கள். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில், குட் லென்த்தில் விழும் பந்தைத் தப்பித் தவறி தொட்டால் கூட, எட்ஜாகி விடும். கதை கந்தலாகி விடும். ஒவ்வொரு பந்தையும் கோலி நிதானமாக எதிர்கொண்டார். கோலியை விட புஜாரா பல மடங்கு நிதானம். ஆம், 54-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானம் ரொம்ப முக்கியம். காத்திருப்பு மிக மிக அவசியம். புஜாராவுக்கு காத்திருக்கவும் தெரியும், அதேநேரத்தில் ஒரு பெளலர் தவறு செய்யும்போது அவரைத் தண்டிக்கவும் தெரியும். நேற்று பிலாண்டர் பந்தில் அடுத்தடுத்து அவர் அடித்த இரண்டு பவுண்டரிகளைப் பார்த்தாலே தெரியும். சூழ்நிலைக்கேற்ப பேட் செய்யும் ஆபத்பாந்தவன் அவர்.
மொத்த அணியும் தடுமாறும்போது டிராவிட் மட்டும் நிலைத்துநின்று கடைசி ஆளாக பெவிலியன் வருவதைப் பார்த்துப் பழகிப்போன இந்திய ரசிகனுக்கு இது ஆச்சர்யம். டிராவிட் போல் இனி ஒருவன் கிடைப்பானா என்ற இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை சற்றே தீர்த்தார் சத்தேஷ்வர் புஜாரா – The new wall of Indian cricket! அவரது பிறந்த நாளான இன்று, அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…
அரவிந்த் புஜாரா – ரீமா புஜாரா தம்பதிக்குப் பிறந்தவர் சத்தேஷ்வர் புஜாரா. மூன்று வயது இருக்கும்போது இவரது மாமா ஒரு பேட்டை இவருக்கு கிஃப்ட்டாக வழங்கினார். வீட்டில் அதை வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில் கேண்டிடாக புஜாராவின் அண்ணன் மகன் இவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதுதான் இவரின் டர்னிங் பாயின்ட். புஜாராவின் அப்பாவும் கிரிக்கெட் வீரர் என்பதால், அந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில் இவர் பேட்டைப் பிடிக்கும் ஸ்டைலில் ஒருவித புரொஃபஷனல் டச்சைப் பார்த்திருக்கிறார். அவரை கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்தார் புஜாராவின் அம்மா. அப்பாவின் தலைமையில் தன்னுடைய கிரிக்கெட் பயணித்துக்கு பிள்ளையார் சுழி போட்டார் புஜாரா.
இவரது பயிற்சிப் பாதையில் கடுமையான பல பயிற்சி முறைகளை மேற்கொண்டு, சிறு வயது சந்தோஷங்களையெல்லாம் தியாகம் செய்தார் புஜாரா. விடுமுறையே கிடையாது. காலையில் 5 மணிக்கு எழுந்து பயிற்சியை ஆரம்பிக்கும் புஜாரா, பயிற்சியை முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். பள்ளியை முடித்துவிட்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, சரியாக இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிட வேண்டும். விடுமுறை நாள்களிலும் புஜாரா பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே புஜாராவின் தந்தை இவருக்கு விதித்த கட்டளை. அதுவும்போக ஹோலி கொண்டாடுவது, தீபாவளிக்கு வெடி வெடிப்பது, கர்பா கொண்டாட்டம் போன்ற வட இந்திய பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் சந்தோஷங்களையும் கிரிக்கெட் மீதான காதலால் விட்டுக்கொடுத்தார். படிப்பிலும் புஜாராதான் ஸ்கூல் டாப்பர். இப்படியே மெள்ள மெள்ள தன் திறமைகளை மெருகேற்றி, அண்டர்-19 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் மைதானத்தினுள் காலடி எடுத்துவைத்தார். அதில் இவர் வெளிப்படுத்திய ஆட்டம், இந்திய அணியில் விளையாட வித்திட்டது. 2010, 2011 ஆகிய ஆண்டுகள் புஜாராவுக்கு சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும், 2012-ம் ஆண்டு இவருக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது.
2012, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், முதல் போட்டி… இந்திய அணி பேட்டிங். ஆட்டத்தின் ஆரம்பமே அட்டகாசமாக அமைந்தது. சேவாக்-புஜாரா கூட்டணி, 90 ரன்னைக் குவித்தது. 5-வது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த யுவராஜ்-புஜாரா கூட்டணி, 150 ரன்னைக் குவித்து இந்திய அணியை வலுவான இடத்தை அடையச்செய்தது. ஆட்டத்தின் முடிவில் 521 ரன்னைக் குவித்து, இங்கிலாந்து அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 206 ரன்னைக் குவித்து, தன் விக்கெட்டையும் இழக்காமல் இருந்தார். 191 ரன்னுக்கே சுருண்ட இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து விளையாடச் செய்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸிலும் திணறிய இங்கிலாந்து அணி, 91 ரன் என்ற ஈஸியான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணியை அபாரமாக வென்றது இந்திய அணி.
புஜாராவின் 50-வது பெஸ்ட் போட்டி… இந்த ஆட்டம், புஜாராவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலான ஆட்டமாக அமைந்தது. 2017-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டம் அது. டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 56 ரன்னுக்கு தவான் ஆட்டமிழக்க, ராகுலோடு ஜோடி சேர்ந்த புஜாரா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 53 ரன்னைக் குவித்தார். அதற்குப் பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த புஜாரா, இன்னிங்ஸின் முடிவின் 217 ரன் குவித்துத் தவித்துக்கொண்டிருந்த இந்திய அணியை சேஃபர் ஜோனுக்கு அழைத்துவந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் 133 ரன் குவித்து, இந்திய வீரர்கள் பட்டியலில் தான் விளையாடிய 50-வது ஆட்டத்தில் சதம் அடித்த 7-வது வீரர் என்ற பெருமையோடு பெவிலியன் திரும்பினார். இதுபோல் நிலைத்துநின்று விளையாடி, இந்திய அணியைக் கரைசேர்த்த போட்டிகள் ஏராளம்.
சாதனைகள் :
* முதல் தரப் போட்டிகளில் கிரிஸ் ரோஜர்ஸுக்குப் பிறகு, ஒரே வருடத்தில் 2,000 ரன்னைக் கடந்திருக்கிறார். இந்தச் சாதனையைச் செய்த இரண்டாவது வீரர் புஜாரா.
* குறைந்த ஆட்டங்களில் 1,000 ரன்கள் குவித்த இந்திய அணியின் இரண்டாவது வீரராக ஜொலித்து, 2013-ம் ஆண்டில், வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்றார்.
* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாள்களுமே பேட்டிங் செய்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் புஜாராவுக்கு உள்ளது.
* 2017-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் குவித்த இரட்டைச்சதம், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மென் பட்டியல் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியது.