அன்பேசிவம் ; அன்பு கனிந்த கனிவே சக்தி என்பது தமிழர் சமயமாகும்; அதுவே உயரிய விழுமியமுமாகும் .அன்பின் பெறுமதியை உணர்ந்த வாழ்வு அழகானது.
அன்பின் வழியது உயிர் நிலை; ஆயினும் அதனை பயிலும் களமாக அமைந்தது குடும்பம்.குடும்ப உறவுகளுக்குள் செழுமை பெறும் அன்பானது விரிந்த சமூக உறவுகளுக்கான அடிப்படையாகும்.
நவீன வாழ்வியல் மாற்றங்களிடை குடும்ப நிறுவனம் தன் அடிப்படையான விழுமிய மேன்மைகளை தொலைத்திடும் அவலம் எம் சிந்தனைக்குரியது.
’அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ என்பது தமிழ் வேதம்
அன்புக்குப் பதிலாக பொருளாதார நலன் இடம்பிடித்ததும் அறம் பிழைத்த மேலாண்மை ஆக்கிரமித்ததும் குடும்ப நிறுவனத்தையே பலவீனமாக்கும்.
பெற்று வளர்த்த தாய் தந்தையரையே முதியோர் இல்லத்து தனித்திருக்க வைக்கும் பெருந்துயர் வரை இதன் விளைவுகள் வலியாகும்.
இந்த வலி தீர வழியென்ன?
’செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் – வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை-அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு’ என அழகாக சொன்னானே பாரதி.
அன்பெனும் தவம் செய்வோம்!அனைத்து வலிகளையும் வெல்வோம்!!
- பேராசிரியர் கலாநிதி என் . சண்முகலிங்கன், முன்னாள் துணைவேந்தர் – யாழ் பல்கலைக்கழகம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]