உயிரினங்களில் அன்னை மகத்துவம் மிக்கவள். பறவைகள், பிராணிகளில் அன்னை உணர்வையும் அதன் மகத்துவத்தையும் நுண்மையாக விபரிக்கும் காட்சிகள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காலம் இது. பிள்ளைகளைக் குறித்த அன்னையின் தவிப்பும் பாசப்போராட்டமும் வார்த்தைகளில் வருணித்துத் தீர்வதில்லை.
ஈழம், புத்திரர்களின் சோகத்தோடும் ஈழ விடுதலைத் தாகத்தோடும் அன்னையர்கள் தவமிருக்கும் நாடு. அந்த அன்னையர்களின் குறியீடாக அன்னை பூபதி அம்மா அவர்கள் ஈழ விடுதலை வரலாற்றில் இடம்பெறுகின்றார்.
இன்று (19.04.2024) அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் நாள். ஈழ விடுதலைக்காக உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாகத் தாய் அன்னை பூபதியின் 36ஆவது வருட நினைவேந்தல் நாள்.
அர்ஜன்டீனா அன்னையர்கள்
உலகில் அன்னையர்கள் விடுதலைக்காக போராடும் நாடுகள் பலவுண்டு. அதில் குறிப்பிடத்தக்க நாடாக அர்ஜன்டீனா இருந்திருக்கிறது. ஈழம் போலவே அங்கும் பல புத்திரர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
இளைஞர்கள், யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்குவதன் மூலம் தேச விடுதலை உணர்வையும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் இல்லாது செய்துவிடலாம் என்று உலகின் எல்லா அடக்குமுறையாளர்களும் எண்ணுகின்றனர்.
அப்படித்தான் அர்ஜன்டீனாவிலும் காணாமல் ஆக்குதல்கள் இடம்பெற்றன. இளைஞர்கள், யுவதிகள் தலைகாட்ட முடியாத அடக்குமுறைச் சூழல் அங்கு தலைவிரித்தாடுகையில் அன்னையர்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அந்த அன்னையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கைகளில் கடதாசிச் சைக்கிள்களை செய்து, அவற்றையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால் அந்த நாட்டின் அடக்குமுறையாளர்கள், அந்தத் தாய்மார்களையும் காணாமல் ஆக்கிய அநீதியை நிகழ்த்தியிருந்தனர். அத்தகைய காட்சிகள் தான் ஈழத்திலும் நடந்தேறின.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காகவும் பல தாய்மார்களும் தந்தையர்களும் போராடி வருகிறார்கள். அவர்கள்மீது பல அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதுடன், அவர்களில் ஒரு தாய் சிறைவரை சென்றிருந்த நிகழ்வையும் கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம்.
ஈழ விடுதலையின் அன்னையர்களின் பங்களிப்பு
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈரமான அன்னையர்களும் உண்டு, வீரமான அன்னையர்களும் உண்டு. அவர்கள் எல்லா வகையிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை தாங்கியிருந்தார்கள். ஈழ மண்ணையும் ஈழ விடுதலையையும் நேசித்த போராளிகளை தங்கள் உயிரிலும் மேலான உத்தமப் பிள்ளைகளாக நேசித்து அன்பு பாராட்டினார்கள்.
விடுதலைப் போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவைக் கொடுத்து அன்பையும் கரிசனையையும் செலுத்திய பல அன்னையர்களை பார்த்திருக்கிறோம்.
ஈழ நிலத்தின் எங்கோ ஒரு இடத்தில் ஒரு போராளியின் தாய் இருக்கும் போது எங்கோ ஒரு நிலத்தில் இருக்கும் இன்னொரு தாய், அந்தப் போராளிக்கு பெற்ற அன்னைபோல் அளித்த அன்பும் ஆறுதலும் அடைக்கலமும் ஈழ விடுதலையின் உன்னத பக்கங்களாகும்.
போராளிகள் தங்கள் வீடுகளுக்கு வந்திருக்கும் போது இராணுவமும் அங்கே போராளிகளைத் தேடி வர, அதனை வீரமாகச் சமாளித்து பல போராளிகளைக் காப்பாற்றிய அன்னையர்களின் தேசம் இது.
இன்றைக்கு ஈழ நிலத்தில் அன்னையர்கள் நடாத்துகின்ற போராட்டத்திற்கு பெரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள்தான் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் ஈழ விடுதலைக்காக அன்றைக்கு இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அன்னைபூபதி அவர்கள் தியாக வழியில், அகிம்சைப் பாதையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக தன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஈழப் போராளிகளுக்காக ஒரு அன்னையாக ஈழ அன்னையர்களின் குறியீடாக அவர் முன்னெடுத்த போராட்டம், ஈழ விடுதலையின் அன்னையர்களின் பங்களிப்பையும் அதன் விரிந்த பக்கங்களையும் காலத்தின் முன் நிறுத்துகிறது.
விடுதலைப் புலிகள் காலத்தில் தியாகத்தாய்
எழுதப்படும் ஞாபகங்களுக்கும் பேசப்படும் நினைவுகளுக்கும்கூட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
நினைவழிப்புகளும் அடையாள அழிப்புகளும் பல முனைகளிலும் முன்னெடுக்கப்படுகின்ற சூழலில்கூட அனைத்துவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராய் ஓரணியில் நின்று அதனை எதிர்க்காமல், நினைவழிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்காமல், சுயநல அரசியலுக்காகவும் வியாபாரத்திற்காகவும் சுறண்டல்களில் ஈடுபடுகின்ற காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
நினைவுகளை ஒருபோதும் இழக்க முடியாது. அதில் வாழ்வும் பாடங்களும் இருக்கின்றன. எல்லா சமூகங்களுக்கும் கடந்த கால வரலாறு இருக்கிறது. நினைவுகள் உள்ளன. அவை அவர்களின் உரிமையும் சுதந்திரமும்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் தியாகத்தாய் நினைவேந்தல் என்பது ஈழ அன்னையர்களினது நாளாகவும் நாட்டுப்பற்றாளர் தினமாகவும் கொண்டாடப்படும். அன்னைபூபதி அவர்களையும் இன்று பயங்கரவாதி என்று சொல்லிக் கொண்டும் சிறிலங்கா அரசு வரக்கூடும்.
அவர் ஈழ தேசத்தின் பொதுமகள். (போராளிகளை மாத்திரமின்றி ஈழப் பொதுமக்களையும் பயங்கரவாதி என்பதே சிறிலங்கா அகராதி) இந்த தேசத்தின் மக்களின் சார்பில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளியில் இருந்து அவ் இயக்கத்திற்கும் ஆதரவையும் இந்திய அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்த இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அன்றைய நாட்களில் ஈழநாதம் பத்திரிகையில் அன்னைபூபதி அவர்களின் தியாகப் படம் வெளியாகும். வீடுகள் தோறும் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். அடையாள உண்ணா விரதப் போராட்டங்கள் தமிழர்களின் தேசம் முழுவதும் நடக்கும். அத்துடன் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் நினைவேந்தல் நடக்கும்.
ஏன் நோன்பிருந்து உயிர்நீத்தார் அன்னை பூபதி?
தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர்.
இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார்.
அன்னையர் முன்னணி இந்திய படைகளுடன் பேசியபோதும் அது பலன் அளிக்காத நிலையில் அன்னையர் முன்னணி போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தது. சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது.
இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார்.
இன்றைக்கு எங்கள் தெருக்கள் முழுவதுதிலும் அன்னை பூபதிகளை காணுகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக நடையாய் நடந்தே உயிர் தேய்ந்து போகும் அன்னையர்களால் ஆனது ஈழம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காக்கவென அவர்கள் போராடிப் போராடியே தங்கள் உயிரை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசும் பன்னாட்டுச் சமூகமும் இதனைக் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. ஆனால் இந்தக் கண்ணீரும் ஏக்கமும் சாபமும் பொல்லாதவை என்பதை மாத்திரம் கருத்தில் கொள்ளுங்கள் என்பதை இப் பத்தி வலியுறுத்துகின்றது.
நன்றி – ஐபிசி தமிழ்