நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு பக்கபலமாக நின்று அனைத்து வழிகளிலும், அதற்கு உதவுவது புதுடில்லியின் கடமை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு அத்தியாவசிய உதவி மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றி வந்துள்ள இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். காரியல் கப்பலின் மாலுமிகளுடன் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, இந்தியாவின் அண்டை நாடாக மாத்திரமன்றி, இந்தியாவின் பழைய நண்பனாகவும் உள்ளது. இந்தியா எப்பொழுதும் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.
அத்துடன், இலங்கை, இந்தியாவின் மூலோபாய பங்காளியாகவும் நெருங்கிய கடல்சார் பங்காளியாகவும் உள்ளது. ஆகவே, நெருக்கடியான நேரத்தில் இலங்கையுடன் நின்று, அதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுவது இந்தியாவின் கடமையாகும்.
ஐ.என்.எஸ். காரியல் கப்பல் மற்றும் பிற இந்திய கடற்படைக் கப்பல்கள் நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நிலை பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.