நாட்டின் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த குடிமைத்தொடர்பு (சிவில் சமூகத்தொடர்பு) மற்றும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரி வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டிற்கு வருகைதந்திருந்ததுடன், இலங்கையில் அவரது பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் முடிவிற்கு வந்தன.
இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதியமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் காலித் கியாரி சந்திப்புக்களை மேற்கொண்டார்.
இதன்போது நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த சிவில் சமூகத்தொடர்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு விரும்பும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி அவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காலித் கியாரி, ‘தற்போதைய மற்றும் கடந்தகால சவால்கள் குறித்தும் வாய்ப்புக்கள் தொடர்பிலும் இலங்கையின் பல்வேறுபட்ட தரப்பினரதும் அபிப்பிராயங்களைக் கேட்டறியமுடிந்தமை மெச்சத்தக்கதாகும். அதேவேளை சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றமையை அவர்கள் வரவேற்றமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி 16 நிறைபேறான அபிவிருத்தி இலக்குகள் உள்ளடங்கலாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ள இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இச்சந்திப்புக்களின்போது உறுதியளித்ததாகவும் காலித் கியாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]