”அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆதீனம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி செங்கோல் ஆதினத்துக்குச் சொந்தமான பல ஏக்க நிலங்கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ளன. இங்கு பணிமுடக்கம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தவறுகள் தொடர்பாகப் புகார்களை அளித்தேன். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து செங்கோல் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை அளக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் இது போன்ற ஆதீன மடங்களுக்குச் சொந்தமான 55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் அவற்றின் வருமானம் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், போதிய வருவாயின்றி பல ஆதீன மடங்களில் நித்யகால பூஜைகள்கூட நடைபெறுவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களும் ஆதீன சொத்துகள் குறித்த விவரங்களைப் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கவும் பதிவுத்துறை தலைவர் அதை உறுதி செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆதீன சொத்துகள் குறித்த தணிக்கை கடைசியாக எப்போது நடந்தது என்பது குறித்தும், அது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .