இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 13ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக கடந்த வாரத்திலிருந்தே பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இத்தாலி நாட்டில் மிலன் நகரில் திருமணம் நடைபெறும் என முன்னர் செய்திகள் வெளிவந்தன. தற்போது அதில் மாற்றமாக மிலன் நகருக்கு அருகில் அமைந்துள்ள, 800 வருடப் பழமை வாய்ந்த டஸ்கனி என்ற கிராமத்தில் உள்ள போர்கோ பினோச்சிடே என்ற ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த ரிசார்ட்டில் உள்ள அனைத்து அறைகளும் விராட், அனுஷ்கா திருமணத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடந்து வரும் இந்திய, இலங்கை ஒரு நாள் தொடரில் விராட் கோலி சேர்க்கப்படாததற்கும் அவருடைய திருமணத் திட்டம்தான் காரணம் என்கிறார்கள். விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் கடந்த வாரம் இத்தாலிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களது திருமண விஷயத்தை ஏன் இன்னும் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் புரியவில்லை.