திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி றொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதியை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவயிலிருந்து நொச்சிக்குளம் பகுதிக்கு அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்காக மணல் ஏற்றிச்சென்ற போதே வவுனியா விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரினால் சோதனையிட்ட வேளை அனுமதிப்பத்திரமில்லாமல் செல்கின்றமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச்சேர்ந்த 23வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவரை செவ்வாய்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.