நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2028ஆம் ஆண்டாகும் போது 15 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதே ஆண்டிலிருந்து நாம் கடனையும் மீள செலுத்த ஆரம்பிக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் அறிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். வங்குரோத்தடைந்த நாடு என்ற முத்திரையுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட்டதன் காரணமாகவே எம்மால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.
அதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு நன்றி கூற வேண்டும்.
2028ஆம் ஆண்டாகும் போது எமது அந்நிய செலாவணி இருப்பு 15 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாட்டு கடனை மீள செலுத்த ஆரம்பிக்கும் நிலையில் இந்த இலக்கை அடைய வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எனவே இதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் என்ன என்பது தொடர்பில் அறிய விரும்புகின்றோம்.
தேர்தலுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தேசிய மக்கள் சக்திக்கு தற்போது யதார்த்தமான சூழலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்திலிருந்தே நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது.
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தனியார் மயப்படுத்தல் என்ற வசனத்தை மிகப் பரவலாகப் பயன்படுத்தியது.
தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தேசிய மக்கள் சக்தி அவற்றை கடுமையாக எதிர்த்தது.
ஆனால் இன்று அவர்களுக்கு அதனை எதிர்க்க முடியுமா? உலகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே யதார்த்தமாகும் என்றார்.