ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற 75 நாட்களில் யாரும் அவரை சந்தித்தாக கூறவில்லை. அதேபோல் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் புகைப்படங்கள் கூட வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவை பார்க்க சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சைப்பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அதில் நைட்டி உடையில் உள்ள ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று உள்ளது. மேலும் முழங்கால் வரை கால்கள் தெரியும் அளவுக்கும் முதுகு தெரியுமாறும் ஜெயலலிதா கட்டிலில் அமர்ந்துள்ளார்.
ஜெயலலிதா கேட்டுகொண்டதன் பேரில் அந்த வீடியோவை சசிகலாதான் எடுத்தார் என்றும் வெற்றிவேல் கூறினார். இதையேதான் சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ணப்பிரியாவும், டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாகவே ஜெயலலிதா கால்களோ கழுத்தோ தெரியாத அளவுக்கு சேலையால் போர்த்திக்கொண்டுதான் நடப்பார். ஜெயலலிதா போட்டிருக்கும் செருப்பை கூட பார்க்க முடியாதது அவரை சட்டசபை போன்ற இடங்களில் நெருக்கத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும்.
ஜெயலலிதா தனது காரில் ஏறும் போது கூட அவரது உதவியாளர்கள் படிக்கட்டு போன்றதொன்றதை வைப்பார்கள் அதன் மீது ஏறிதான் ஜெயலலிதா காரில் அமருவார். அப்படிப்பட்ட ஜெயலலிதா முழங்கால் வரை தனது கால்கள் தெரியுமாறும் முதுகு தெரியுமாறும் உள்ள ஒரு வீடியோவை எடுக்க எப்படி அனுமதித்திருப்பார்.
தானே வீடியோ எடுக்க சொல்லியிருந்தால் குறைந்தது ஒருமுறையாவது திரும்பி பார்த்திருப்பார். அல்லது வீடியோ எடுப்பவரிடம் ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசியிருப்பார். மேலே ஒரு துணியை போட்டு போர்த்தியாவது இருப்பார்.
ஆனால் இந்த வீடியோவில் ஒருமுறை கூட ஜெயலலிதா திரும்பி பார்க்கவில்லை. இரட்டை ஜடையில் பார்ப்பதற்கே பரிதாபமாக தோன்றும் இப்படி ஒரு வீடியோவை அந்த இரும்பு மனுஷியா எடுக்க சொல்லியிருப்பார் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.