இலங்கை மின்சார சபையின் எரிபொருள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொது விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தியுடன் முன்னெடுப்பது தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தமது கட்சியின் தொழிற்சங்க உறுப்பினரான வசந்த சமரசிங்கவுடன் இந்த விவாதத்தை மேற்கொள்ளுமாறு இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்திருந்த நிலையில், அதனை கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின்அஎரிபொருள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
பொது விவாதத்துக்கு அழைப்பு
இதனை ஏற்றுக் கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொது விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பொது விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி தயார் என இன்று நாடாளுமன்றில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் தொழிற்சங்க உறுப்பினரான வசந்த சமரசிங்க தொடர்பில் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வசந்த சமரசிங்க தயாராக இருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமாரவின் யோசனையை நிராகரித்த கஞ்சன
இந்த பின்னணியில், அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த யோசனையை தாம் நிராகரிப்பதாக கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
அத்துடன், தொழிற்சங்க உறுப்பினர் ஒருவருடன் விவாதிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது விவாதத்துக்கு அநுரகுமார திஸாநாயக்க ஆயத்தமானால் தாமும் அதற்கு ஆயத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது கட்சி இந்த விவாதத்துக்கு ஆயத்தமாக இருப்பதாகவும் கட்சி சார்பில் வசந்த சமரசிங்க முன்னிலையாவார் எனவும் அநுரகுமார தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பதிலாக மற்றுமொருவர்
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பதிலாக மற்றுமொருவர் முன்னிலையாவதை போல், குறித்த விவாதத்துக்கு தாமும் மற்றுமொருவரை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொருவரை அவர் வேட்பாளராக முன்வைப்பார் எனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்