இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது.
கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ-யின் தற்காலிகத் தலைவர் சி.கே. கண்ணா வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர், துணைப்பயிற்சியாலர்களுக்கான சம்பளம் குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளனர். இந்தக் குழுவினர் தங்களது நிர்ணயங்கள் குறித்து வருகிற 22-ம் தேதி அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதில், புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.