தனிக்கட்சி தொடங்குவதற்கான ரகசிய வேலைகளில் தினகரன் இறங்கிவிட்டதை கேள்விபட்டு அதிர்ந்த சசிகலா பரோலில் போயாக வேண்டும் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவைப் பொறுத்தவரையில் அவரது குடும்பத்தில் மகாதேவன், சந்தானலட்சுமி இருவர் மீதுதான் அதிக பாசம் வைத்திருந்தவர். மகாதேவன் மீது மிக அதிக பாசம் வைத்திருந்தார். ஆனால் சசிகலா சிறையில் இருந்த போதே மகாதேவனும் சந்தானலட்சுமியும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் மனம் உடைந்த போனார் சசிகலா. ஆனால் பரோலில் வர விரும்பாமலேயே இருந்தார்.
ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட கணவர் நடராஜன் வீட்டுக்கு போகாமல் போயஸ் கார்டனிலேயே தங்கியிருந்தார் சசிகலா. சசிகலா சிறைக்குப் போன நேரத்தில் கூட நடராஜன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அப்பல்லோவுக்கு போய் நடராஜனை சசிகலா சந்திக்கவே இல்லை. தற்போதும் கூட மிகவும் கவலைக்கிடமான நிலையில் நடராஜன் அனுமதிக்கப்பட்ட போதும் பரோலில் சசிகலா அக்கறை காட்டவில்லை. இப்போது திடீரென கணவரை பார்க்க வேண்டும் என பரோல் கேட்டது ஏன் மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம்.
அதாவது இரட்டை இலை சின்னம் பறிபோவதும் அதிமுக கட்சி ஈபிஎஸ் தரப்பிடம் போவதும் உறுதி; ஆகையால் தினகரன் தனிக்கட்சி தொடங்கும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் என்கிற தகவல் சசிகலாவுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதைக் கேட்ட சசிகலா கடுமையாக அதிர்ந்து போனாராம்.
தினகரனைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் பதவியைவிடவும், தனக்காக கூடும் கூட்டத்தை நம்பி தனிக்கட்சி தொடங்கலாம் என திட்டம் போடுகிறாராம். சசிகலாவிடம் தம்மைப் பற்றிப் புறம் கூறி வருபவர்கள் குறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இரட்டை இலையைவிடவும் டி.டி.வி என்ற பெயருக்காகவே கூட்டம் கூடுகிறது. மேலூர் கூட்டமாக இருந்தாலும் திருச்சியில் நடந்த நீட்டுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் இப்படியொரு கூட்டத்தை ஆள்பவர்களால் திரட்ட முடியவில்லை. இலையே தேவையில்லை. தனிக்கட்சி தொடங்கி பெரு வெற்றி பெறலாம் என்பதுதான் தினகரனின் திட்டமாம்.
இதை கேள்விபட்ட சசிகலாவோ, தனிக்கட்சி தொடங்கி கூட்டத்தைக் காட்டி காணாமல் போனவர்கள் அநேகம் பேர். வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் கூடாத கூட்டமா? அவர்கள் இருவரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. பணபலத்தால் எதையும் வாங்கிவிட முடியாது. மக்கள் நம்பிக்கையைப் பெறுவது கடினம் என பொரிந்து தள்ளினாராம் சசிகலா. இனியும் தினகரனை விட்டுவைத்தால் வேலைக்கு ஆகாது; இனி கட்சி என் கையில் இருக்கட்டும். பரோலில் எடுக்க வேண்டிய வேலையை பாருங்கள் என ருத்ரதாண்டவமாடினாராம் சசிகலா. இதுதான் சசிகலாவின் திடீர் பரோலின் பின்னணி என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.