அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’’ என்ற கட்சியின் சட்ட திட்ட விதி – 20 (அ), பிரிவு – 2ன்படியும், கழக சட்ட திட்ட விதி – 20அ, பிரிவு – 1, (ஏ), (b), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு.பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது, தேர்தல் ஆணையாளர்களான, கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், ஆகியோரால் இன்று (மார்ச்.28) அறிவிக்கப்பட்டு, அதற்கான வெற்றிப் படிவத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமியிடம் வழங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்” – இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச் செயலாளராக நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர். என்னை அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு: முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 22-ம் தேதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார்