அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அது பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிபரையும் ஆசிரியர்களையும் தெய்வமாக மதிக்கும் ஒரு சூழலே பிள்ளைகளின் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கடந்த காலத்தில் தன்னைப் போன்ற பலரது உயர்வுக்கு ஆசிரியர்களே காரணம் என்றும் கூறினார்.
இதேவேளை அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் அது பிள்ளைகளை பாதித்து அழித்துவிடும் என்றும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.
அத்துடன் தற்போது சட்டவிரோதமான போதைப் பொருள் பாவனை பாடசாலைக்குள் ஏற்பட்டுள்ளமையை பாடசாலை நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதனால் ஆண் பிள்ளைகள் மாத்திரமின்றி பெண் பிள்ளைகளுக்கும் பாதிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதனை தடுக்க முடியாத அளவில் வினைதிறனற்ற நிலையில் பாடசாலை நிர்வாகம் காணப்படுமாயின் அதனை அனுமதிக்க முடியாது என்றும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.