பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் “போகமாட்டோம் பாடசாலைக்கு” என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் மீண்டும் இன்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கல்வி அமைச்சருக்கான கடிதம்
குறித்த கடிதத்தில், பாடசாலைகளை இயக்குதல் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட இலகு பொறிமுறையை நடைமுறைப்படுத்துங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில், போக்குவரத்து சீரில்லை. மாணவரின் போசணைக்கு வழியில்லை, ஆசிரியர்களின் பயணத்திற்கு வழியில்லை.
இதற்கு மேலதிகமாக இன்னும் பல சிரமங்கள் காணப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நடாத்தி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க இன்றைய காலத்திற்குப் பொருத்தமான இலகுவான பொறிமுறைகளை முன்வைத்தோம்.
இலகுவான பொறிமுறைகள்
ஆசிரியர்களை சுழற்சி முறையில் அழைத்தல் மற்றும் பாட நேரங்களை அதிகரித்தல்.
ஆரம்ப வகுப்புக்களுக்கு சுழற்சி முறையில் நாட்களைத் தெரிவு செய்தல்.
மாணவர்களை கிரமமாக பாடசாலைக்கு வரவழைத்து மதியபோசனம் வழங்குதல்.
தூர இடங்களுக்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பயண செலவில் அரைவாசியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளல் போன்ற பொறிமுறைகளை முன்வைத்தோம்.
இவை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் எல்லோரின் மனநிலையிலும் விரக்தி ஏற்பட்டு இளையோர் வீதியில் இறங்கியது போன்று அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் “போகமாட்டோம் பாடசாலைக்கு” என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.