அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நாட்டிலே இன்று நிர்வாகமொன்று இல்லை. அரசாங்கம் இருக்கின்றதா, அமைச்சரவை இருக்கின்றதா என்றுகூட தெரியவில்லை. பொருட்களின் விலை கட்டுக்கடங்காத வகையில் உயர்கின்றது.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. பின்னர் அந்த முடிவு மீளப்பெறப்படுகின்றது. எனவே, இங்கு எவ்வாறானதொரு ஆட்சி நடைபெறுகின்றது என தெரியவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்றனர். ஆனால் சம்பள அதிகரிப்பு உரிய வகையில் வழங்கப்படுவதில்லை. முறையாக அதனை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். அதனைவிடுத்து ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
அதேபோல அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலான தீர்வு விரைவில் முன்வைக்கப்பட வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]