அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தூய்மையான ஒரு எதிர்காலத்தினை தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கின்றனர்.
இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது.
அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார நெருக்கடி.
அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை.
சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன.
சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும்.
சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது.
இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்; தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.
அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும்.
வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர் வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர்.
இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள் ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை.
சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள.
நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது.
வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர்.
இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை.
கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா
சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது.
இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சரியான முறையில் அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும்.
மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள்.
புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது.